கைப்பேசி வாக்குவாதத்தால் 11வயது தங்கையைக் கொன்ற தமையன்

தன் தங்கை கைப்பேசியைத் தர மறுத்ததால் அவளின் 14 வயது தமையன் கழுத்தை நெரித்துக் கொன்று அவளது உடலைக் குளியலறை தண்ணீர்த் தொட்டியில் மறைத்துவைத்த சம்பவமொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த பொலிஸார் 14 வயது சிறுவனை இன்று சனிக்கிழமை (30) கைதுசெய்தனர்.

கடந்த வியாழக்கிழமை (28) மாலையில், ஏறாவூர் 5 ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்தியானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், தந்தை சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியே சென்றிருந்தார். இதனால் 14 வயதுடைய அண்ணனும் 11 வயதுடைய தங்கையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, தங்கை வைத்திருந்த கைபேசியை ‘டிக் டாக்’ பார்ப்பதற்காக அண்ணன் கேட்டுள்ளார். அதற்குத் தங்கை மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த அண்ணன், தங்கையின் கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தங்கை உயிரிழந்ததைக் கண்ட சிறுவன், அதனை மறைப்பதற்காக அவரது உடலை இழுத்துச் சென்று குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுள்ளார்.

பின்னர், எதுவுமே நடக்காதது போல் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின் தந்தை வீட்டிற்கு வந்தபோது பிள்ளைகளைக் காணாததால் தேடியுள்ளார். அப்போது குளியலறைத் தண்ணீர்த் தொட்டிக்குள் 11 வயது மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 14 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவரே தனது தங்கையைக் கொலை செய்தார் என்பது உறுதியானது.

இதனையடுத்து அச்சிறுவனைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கௌசல்யா, க. சரவணன்