வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாமினால் 2017 செப்டம்பர் 27ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது.