மாலைதீவு ஜனாதிபதி வருகையால் கொழும்புவில் விசேட போக்குவரத்து

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி இன்று (03) விசேட போக்குவரத்து ஒழுங்கைச் செயல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தப் போக்குவரத்துத் திட்டம் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை மாலைதீவு ஜனாதிபதி கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்கா – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்புவிற்கு வருகிறார்.

அந்த நேரத்தில்; விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதால், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.