மீசாலையில் புதிய வீடு பயனாளியிடம் கையளிப்பு

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை கிழக்கில் ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (28) பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியில் மூன்று மாதமளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு, உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த வீடு,வெறும் கட்டடம் அல்லாது, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, குழந்தைகளின் கனவுகள், பெற்றோரின் நிம்மதி, எதிர்கால நம்பிக்கையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கம் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நடைமுறையில் நிறைவேற்றும் முயற்சியின் ஓர் எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் கருதப்படுவதுடன், வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம்,உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் சமத்துவமான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

“சொந்தமாக இருக்க இடம் – ஓர் அழகான வாழ்க்கை” என்ற அடிப்படையில், மேலும் பல குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் பணிகள் தொடரும் என அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமுான சுந்தரமூர்த்தி கபிலன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர் திருமதி. வெண்ணிலா, சமூக சக்தியின் தவிசாளர் ம. கஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

க. கிஷாந்தன், ஊடகச் செயலாளர், கடற்றொழில், நீரியல்,கடல்வளங்கள் அமைச்சு