சித்த மருத்துவமனை விவகாரம்: ஜனாதிபதி தலையிடக் கோரிக்கை

ஆனைக்கோட்டை சித்த மருத்துவமனை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சண்டிலிப்பாய் பிரதேசத்திலுள்ள ஆனைக்கோட்டை சித்த மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மக்கள் தெரிவிப்பதாவது, இங்கு பணியாற்றும் சில சித்த மருத்துவர்கள், பணியாளர்கள் தங்களுக்கான கடமை நேரத்தை முறையாக பின்பற்றாமல், சேவை நேரத்தை குறைத்துக் கொண்டு முன்கூட்டியே பணியிடத்தை விட்டு வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் சிகிச்சை பெற வரும் ஏழை நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமை குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளூர், மாகாண அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவிதமான உறுதியான; திருப்திகரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அநுர அரசின் பொதுச் சேவையின் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் இந்த விவகாரத்தில் சனாதிபதி நேரடியாக தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக:

CCTV கண்காணிப்பு கட்டாயமாக்குதல்

வருகைப் பதிவு (Fingerprint) முறை நடைமுறைப்படுத்துதல்

மருத்துவமனையின் தினசரி செயல்பாடுகளுக்கான கண்காணிப்பு முறைமை ஏற்படுத்துதல்

ஆகிய நடவடிக்கைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

மக்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த பொதுச் சேவை இவ்வாறு செயல்பாட்டு சீர்கேடுகளுக்கு உள்ளாகுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனப் பொதுமக்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றனர்.

மேலும், வடமாகாணத்தில் உள்ள பல சித்த மருத்துவமனைகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் நிலவுவதாகவும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கெளசல்யா