இந்துக் கடவுள்களை அவமதித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்க் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மையில் இராமர், இலட்சுமணர் பற்றி கேலியாகப் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாஜகவின் ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென ஆந்திர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
“இந்துக் கடவுள்கள், கலாசாரம் குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அப்படி பேசுபவர்களின் பேச்சை இனி கேட்டுக்கொண்டு இருக்க முடியாது,” என்றார் அவர்.
“கோயில்கள் என்பது மதசார்பற்ற இடம் கிடையாது. அது இந்துக்களுக்கு மட்டுமானது. இனி கோயில்களில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். வியாபாரங்களும் இந்துக்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலிலும் வேற்று மதத்தினர் பலர் பணியாற்றுகின்றனர் எனும் தகவல்கள் வருகின்றன. இது குறித்தும் ஆந்திராவில் கூட்டணி அரசு ஆலோசித்து முடிவெடுக்கும்.
“ஆந்திராவில் இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
