இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.
இகாகோர்ட் கிராமத்திற்கு அருகே திங்கட்கிழமை இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
அந்தப் பேருந்து உதம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது. கொண்டை ஊசி வளைவில் வளைந்தபோது, நிலைதடுமாறி உருண்டு கீழே விழுந்தது.
விபத்து குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களையும் அவர்கள் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் காயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தோரின் உடல்களும் அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
