https://www.mathemurasu.lk/q9rx

அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காணு முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டுக் கிராம கிரிக்கெட் மைதானத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டுக் கிராம புற்தரை மைதானத்தைப் பராமரிப்பதற்கு இலங்கையில் முதல் தடவையாக மூன்று கோடி ரூபாய் பெறுமதியான இயந்திரத்தைக் கையாள்வது தொடர்பான பயிற்சிகளை இரண்டு வார காலம் மைதானத்தில் தங்கியிருந்து வழங்கவுள்ளார்.

எதிர் வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இவ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் வட கிழக்கு மாகாணத்தில் பிரதேச இளைஞர்களைச் சிறந்த கிரிக்கட் வீரர்களாக  மாற்றுவதற்கும் தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்குக் கருத்து தெரிவித்த பிரட் வப்டிஸ், சர்வதேச தரத்தில் இம் மைதானம் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் இருந்து முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மையில் வேகப்பந்து வீச்சாளர்களை இனங்காணும் செயல் பட்டறை முன்னெடுக்கப்பட்டது அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வீரர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ். வரதராஜன், மட்டக்களப்பு