விடுதியில் குடும்பஸ்தரைத் தாக்கிய சந்தேக நபர்கள் அடையாளம்!

நுவரெலியா-ஹாவாஎளிய பகுதியில் மதுபான விடுதியொன்றில் குடும்பஸ்தர் ஒருவரை சாகும் அளவுக்குத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விடுதியின் முகாமையாளரையும் அவரது சகா ஒருவரையும் சாட்சியங்களுடன் நுவரெலியா பொலிஸார் நேற்று (19) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது அந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர். அதனையடுத்து இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நுவரெலியா மாவட்ட நீதவான், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

கடந்த 14 ஆம் தேதி நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் உள்ள மதுபான தனியார் விடுதியில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தால் விடுதி முகமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை இறந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய அன்பழகன் என்பவரின் வழக்கு நேற்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 15 ஆம் திகதி மாலை நுவரெலியா போலீசாரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது சந்தேக நபர்களை இனம் காணுவதற்காக மூன்று சாட்சியங்களுடன் போலீசார் முன்னிலையாகி இருந்தனர்.

கௌசல்யா