30,000 வீரர்களுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

குஜராத் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘சர் கிரீக்’ பகுதியில் இந்திய ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 30,000 வீரர்கள் பல்வேறு போர்ப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

பயிற்சி நடைபெறும் ‘சர் கிரீக்’ பகுதியானது குஜராத் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியை வைத்து புது சர்ச்சையைக் கிளப்ப பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக முயன்று வருவதாகவும் இதன் காரணமாகவே ராணுவப் பயிற்சிக்கு சர் கிரீக் பகுதியை இந்திய அரசு தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா தனது துருப்புகளைக் குவிப்பதுபோல் சர் கிரீக் பகுதியில் இந்தியாவும் படைகளைக் குவித்துள்ளது. இந்நிலையில், அங்கு அக்டோபர் 30 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மொத்தம் 12 நாள்களுக்கு போர்ப் பயிற்சி நடைபெறும்.

30,000 வீரர்கள் பங்கேற்கும் இப்பயிற்சிக்கு ‘திரிசூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனால் கலக்கமடைந்துள்ள பாகிஸ்தான், தனது ராணுவமும் அக்டோபர் 28, 29ஆம் தேதிகளில் பயிற்சியில் ஈடுபடும் என அறிவித்துள்ளது.

“சர் கிரீக் என்பது ஒரு சதுப்பு நிலப்பகுதி. குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு இடையே அமைந்துள்ள பகுதி இது.

பயிற்சியின்போது சர் கிரீக் பகுதியின் வான்பரப்பில் விமானங்கள் பறக்க வேண்டாம் என இந்திய அரசு எச்சரித்துள்ளது. இதேபோன்ற அறிவிப்பை பாகிஸ்தானும் வெளியிட்ட நிலையில், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், நவீன ஆயுதங்களுடன் பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

‘சர் கிரீக்’ பகுதியையொட்டி பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு புதிய கட்டடங்கள், போர் விமானங்களுக்கான ஓடுபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.