இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சில சொற்கள் தமிழுக்குப் புதிதாக வந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதன்போது, அதன்போது, குறித்த, மற்றும் போன்ற சொற்களைத் தேவை இல்லாமல் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அந்தக் கூட்டத்தின்போது அவர் உரையாற்றுகையில் அல்லது சந்திப்பு நடைபெற்றபோது என்பதற்குப் பதிலாக இதன்போது அதன்போது என்று எழுதுவது சரியா? என்றால், பிழை என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
அந்தச் சொற்கள் – இதன் மூலம், அதன் விளைவாக, இதன் காரணமாக, அதன் பயனாக என்று வருமே தவிர இதன்போது அவர் உரையாற்றுகையில் என்று எழுதுவது தமிழுக்குக் கேவலம் என்கிறார்கள்.
இப்படி எழுதும் இலங்கை இணையத்தளத் தமிழ்ப் பண்டிதர்கள் அந்தச் சொற்கள் எப்போது முளைத்தன என்பதையாவது சொல்லிவிட்டு எழுதலாமே!
மற்றும், குறித்த
You and Me என்பதை நீ மற்றும் நான் என்றா எழுதுவோம்? நீயும் நானும் என்றல்லவா எழுதுவோம்! பின் தேவையில்லாமல் எப்படி இந்த மற்றும் வந்தது?
கண்டி, காலி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் என்று சிலவேளை எழுதுகிறார்கள். ஆகிய வந்தால் எப்படியடா மற்றும் வரும்? என்று கேட்கிறார் ஒரு தமிழாசிரியர்!
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் என்று ஆயிரத்தெட்டு தடவை எழுதுகிறது. கண்டி மற்றும் மாத்தளை, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் என்று எழுகிறது. மழை வருகிறதோ இல்லையோ இவர்களின் மற்றும் வருகிறது!
சப்ரகமுவ என்பது பிழையான சொற்பதம். அது சப்பிரகமுவை என்று எழுதப்படவேண்டும், சுப்பிரமணியத்தைப்போல. வாசிக்கும்போது சப்ரகமுவ, சுப்ரமணியம் என்று வாசிக்க வேண்டும்.
அடுத்த கொடுமை இந்தக் குறித்த என்ற சொல். எவன் இநதச் சொல்லைக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை இலங்கைத் தமிழ் என்று?!
குறித்த என்பதை அந்த, இந்த என்று எழுதினால் என்னவாம்? The என்பதற்கு குறித்த என்று எங்கும் வியாக்கியானப்படுத்தப்படவில்லை. இஃது அரைகுறை அறிவோடு இணையத்தளம் செய்ய வந்த சிலரால் வந்திருக்கும் கொடுமை!
இதன்போது அதன்போது எப்போது வந்தது? என்பதைச் சொல்லித்தாருங்கள் ஐயாமாரே…அப்போது எப்போது இப்போது என்பவை மாறித்தான்விட்டதோ?!
இந்த இலட்சணத்தில் இலங்கைத் தமிழ் சூப்பர் என்று அப்பாவித்தனமாகச் சில இந்தியர்கள் பீற்றுவது உண்மையில் சூப்பர்தான்!
சாதுரியன்
