சீனாவுக்கு எதிராகப் புதிய 100% வரிகள்

சீனாவுக்கு எதிராகப் புதிய 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காசீனா வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கிவிட்டது.

அரிய வகை கனிம வளங்களைச் சீனா ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த கூடுதல், பேரளவிலான வரிகளை அதற்கு எதிராக விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) உறுதி அளித்தார்.

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 100 விழுக்காடு வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அதுமட்டுமல்லாது, நவம்பர் 1ஆம் தேதிக்குள் அனைத்து வகை முக்கிய மென்பொருள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றார் அவர்.

இதற்கிடையே, இன்னும் மூன்று வாரங்களில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அதிபர் டிரம்ப் சந்திக்க இருப்பதாகத் தெரிவிகக்கப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பு தென்கொரியாவில் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், சீனாவுக்கு எதிராகத் தற்போது கூடுதல் வரி விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்து வருவதால் அதிபர் ஸியுடனான சந்திப்பு நிகழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“சந்திப்பை நான் இன்னும் ரத்து செய்யவில்லை. சந்திப்பு தொடரும் என்று நினைக்கிறேன்,” என்று வெள்ளை மாளிகையில் கூடிய செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவுக்கு எதிராகப் புதிய 100% வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.