தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாகத் திகழும் கோயம்புத்தூர் – அவிநாசி ரோடு மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (09 அக்டோபர்) காலை 11 மணிக்கு கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் காரில் சென்றபடி, புதிய மேம்பாலத்தைப் பார்வையிட்டார். திறப்பு விழாவுக்குப் பின், புதிய மேம்பாலம் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக நீளமான பாலமாக இது அமைந்துள்ளது. அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை மொத்தம் 10.10 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலமாகும்.
முன்னதாக, தமிழகத்தில் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் மேம்பாலச் சாலை 7.3 கி.மீட்டர் தூரத்துக்கு இருந்தது. இப்போது கோவையின் புதிய மேம்பாலம் அதனை மிஞ்சிவிட்டது.
கோவை மேம்பாலத்திற்காக மொத்தம் சுமார் 4.90 ஏக்கர் நிலம் ரூ.228 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்த மேம்பாலக் கட்டுமானம் ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது.
இந்த மேம்பாலம் மூலம் கோயம்புத்தூரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும்.
இந்த மேம்பாலத்தில் கோயம்புத்தூர் விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறுதளங்களும் இறங்கு தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
