ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை வருடாந்த திருவிழா

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை வருடாந்த திருவிழா முன்னாயத்த
கலந்துரையாடல் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான துறைசார் அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் திருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ள நிலையில் திருவிழாவை முன்னிட்டு செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை பாதயாத்திரை நடைபெறும்.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம், செங்கலடி தேவாலயம் ஆகியவற்றில் இருந்து பாதையாத்திரை ஆரம்பமாகும்.

பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் யாத்திரியர்களுக்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தல், ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருதலத்தின் திருவிழா காலங்களில் –

திருத்தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான பொது வசதிகள், பாதுகாப்பு தொடர்பாக முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட பரிபாலகர் அன்டன் ரஜ்ஜித் ஆண்டகையின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும், கிறிஸ்தவ மத விவகார அமைச்சும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையில் திருத்தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான குடிநீர் வசதிகள்,

போக்குவரத்து, பொலிஸ் பாதுகாப்பு, ஆலய பகுதிகளுக்கான மின்சார வசதி, திருவிழா காலத்தின் போது பக்தர்கள் முன்னெடுக்கவுள்ள பாதையாத்திரையின் போது அவர்களுக்கான உணவு வசதிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளாரின் பங்கு பற்றுத்துதலுடன் –

மாவட்ட செயலக கிறிஸ்தவ சமய உத்தியோகத்தர் ரேகா நிருபன் ஒருங்கிணைப்பில் ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல பங்கு தந்தை அருட் பணி ஜெறிஸ்டன் வின்சன்ட் அடிகளார்,

செங்கலடி மறை கோட்ட முதல்வர் ஜெரோம் டிலிமா மண்முனை மேற்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள்,

பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மின்சார சபையினர், போக்குவரத்து சாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக பாதை யாத்திரைக் குழுவினர், அருட்தந்தையர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சா.நடனசபேசன்