பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை

பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியமானதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி யிடம் வலியுறுத்தியுள்ளார்.

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு புதுடில்லியில் நேற்று (18 ) நடைபெற்றது.

அப்போது, சவாலான காலகட்டத்தில் உறவைப் பேணவும் பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாடுகளுக்குமிடையில் நேர்மையும் ஆக்கபூர்வமான அணுகுமுறையும் அவசியமானதென்று அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான எல்லைப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு இந்தியா சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறபோது இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்றும் கலாநிதி ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், சீன வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஒரே சீனா கொள்கையை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் தாய்வான் சீனாவின் ஒரு பகுதி என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியம் என்று அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியிருக்கும் நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இன்று செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் சந்திப்பை நடத்துகிறார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசுகிறார்.