கிழக்கு மாகாணத்திலுள்ள பதினேழு கல்வி வலயங்களில் பட்டிருப்பு கல்வி வலயம் நான்காம் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
இந்த வலயம் நான்காம் நிலைக்கு முன்னேற்றம் அடைவதற்குத் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பங்களிப்பு மிக அவசியமானதாகக் காணப்படுகிறது.
மாணவச் செல்வங்களின் கற்றல் செயற்பாடுகளும் அதிபர், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையும் பட்டிருப்பு கல்வி வலயம் முன்னேற்றம் காண்பதற்கு அடிப்படை என்பதை மறந்து விடமுடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் சா.கிருபைராசா தலைமையில் சனிக்கிழமை (16) இடம்பெற்றது.
இந்த விழாவில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் விஷேட அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பு. திவிதரன் ஆர். ஜீவானந்தராஜா, எஸ்.சுரேஸ், பாடசாலைகளின் அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
திரு. சிறிதரன் அங்கு உரையாற்றுகையில்:
பண்பாட்டு விழுமியங்களைப் பறைசாற்றி முறையான திட்டமிடலுடன் கல்வியில் முன்னேற்றமடைந்த அர்ப்பணிப்பான கல்விமான்களை உருவாக்கிய துறைநீலாவணைக் கிராமத்திற்கு தனித்துவமான இடமிருக்கின்றது.
அதனை இப்பாடசாலை மாணவர்கள் நிறைவேற்றி வருகின்றமை பாராட்டத்தக்கது. இப் பாடசாலையில் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர்களை மறந்து விட முடியாது.
குறிப்பாக எமது வலயத்தில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றுகின்ற திருச்செல்வம், இப்பாடசாலையில் அதிபராக பொறுப்பேற்று பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்றார்.
இவரைப் போன்று முன்னர் சேவையாற்றிய அதிபர்களினதும் பங்களிப்புக்களும் வரவேற்கத்தக்கன.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குச் சில விசேடமான தனித்துவங்கள் இருக்கின்றன.காலங் காலமாக பல சாதனைகளை நிகழ்த்துகின்ற மாணவர்களையும் அர்பணிப்புடன் சேவையாற்றுகின்ற அதிபர்,ஆசிரியர்களைக் கொண்ட வலயம் இது.
இந்த வலயத்தின் பணிப்பாளர் என்ற வகையில் பெருமையடைகின்றேன்.கல்வி வலயத்தில் உள்ள 70 பாடசாலைகளில் சுமார் 22600 மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாணவர்களின் சாதனைகளுக்குக் காரணகர்த்தாக்கள் அர்ப்பணிப்பாக இருக்கின்ற அதிபர்களையும் ஆசிரியர்களையும் மறந்துவிடமுடியாது 2023 காலப்பகுதிக்குப் பின்னர் பட்டிருப்பு வலயம் பாரிய முன்னேற்றம் கண்டிருக்கின்றது.
21ஆம் நூற்றாண்டில் மாணவர்கள் மத்தியில் தொழில் சார் சமுதாயத்தினை முன்னேற்றும் நோக்கில் பல செயற்பாடுகளை பட்டிருப்பு கல்வி வலயம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
செயற்பாடுகளுக்கு எமது உத்தியோகத்தர்கள் நேரம் காலம் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடந்த 2023 இல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறானது 70% ஆகக் காணப்பட்ட போதிலும் 2024 இல் 78.3% ஆக அதிகரித்திருந்து.
இம்முறை பரீட்சை முடிவுகளும் முன்னேற்றம் அடையும் என்பதனை எதிர் பார்க்கின்றோம்.
கடந்த காலப்பகுதியில் 65 முதல்70 சதவீதமாகக் காணப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது 79.1 சதவீதமாக மாற்றமடைந்திருக்கின்றமை மகிழ்ச்சி தருகின்றது.
இதே போன்று உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயமானது கடந்த காலங்களில் 13ஆம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை பாரிய வெற்றியாகும்.
பட்டிருப்பு கல்வி வலயம் நான்காம் நிலைக்கு முன்னேற்றம் அடைந்ததைப்போன்று இவ்வாறான வெற்றி எதிர் காலத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அனைவருடைய பங்களிப்பு அவசியமானது எனத்தெரிவித்தார்.
சா.நடனசபேசன்

