பொரளை துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞனும் பலி யாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது.
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 அளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து நால்வர் படுகாயமடைந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், சுமார் 20-25 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலின் பின்னர் குற்றவாளிகள் தப்பியோடியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த ஐந்து இளைஞர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், களனியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தற்போது, மற்றுமொரு இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மீதமுள்ள மூவரில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
மேலும், இவர்களுக்கு எதிர்காலத்தில் மேலதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

