காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை, காஸாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஹமாஸ் குழுவை வீழ்த்தும் முயற்சியின் கடைசிக் கட்டமாக அது பார்க்கப்படுகிறது. அங்குக் கடந்த 22 மாதங்களாகக் கடும் போர் நடந்துவருகிறது.
போர்க்களத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியத் தற்காப்புப் படையினர் மனிதாபிமான அடிப்படையில் உதவிப்பொருள்களை வழங்க அமைச்சரவையின் முடிவு உதவும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இஸ்ரேலிய அமைச்சரவை 10 மணி நேரம் விவாதித்த பிறகு அறிக்கை வந்துள்ளது.
இஸ்ரேலின் போர்க்கால இலக்குகளை மறுஉறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் வாக்களித்தனர்.
ஹமாஸ் குழுவிடமிருந்து பணயக் கைதிகள் அனைவரையும் மீட்பது, ஈரானிய ஆதரவில் செயல்படும் அக்குழுவை ஆயுதங்களைக் களையச் செய்வது, காஸா வட்டாரத்தில் இராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் அகற்றுவது முதலியவை அவற்றுள் அடங்கும்.
பாலஸ்தீன வட்டாரம் தொடர்ந்து இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண்டும் என்பதற்கும் போருக்குப் பின்பு, வட்டாரத்தின் நிர்வாகம் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன ஆணையத்தின் கீழ் வரக்கூடாது என்பதற்கும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தற்காப்புப் படையின் கட்டுப்பாட்டில் ஏற்கெனவே காஸா வட்டாரத்தின் கிட்டத்தட்ட 75 வீதமான பகுதி உள்ளது.
போரால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது. அவர்கள் வசித்த வீடுகளும் நகரங்களும் தரைமட்டமாயின.
காஸா நகரின் வட பகுதி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.
அங்குதான் ஹமாஸ் குழு, எஞ்சிய 50 பணயக் கைதிகளை வைத்திருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது. அவர்களில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தச் சூழலில் காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இஸ்ரேலின் இந்தத் திட்டத்தைக் கண்டிப்பதாக கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

