அடிக்கடி முடமாகும் மஸ்கெலியா-மறே பஸ்! சேவை குறித்துப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஹட்டனில் இருந்து மஸ்கெலியா வழி மறே செல்லும் ஒரே ஓர் அரச பஸ் நாளாந்தம் பழுதாகுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் இ. போ. சபையால் நடத்தப்படும் இந்த சேவை, ஹட்டன், மஸ்கெலியா, நல்லதண்ணி வழியாக மறேவரை இடம் பெற்று வருகிறது.
இந்தச் சாலையில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்து மிகவும் பழைமையான பேருந்தாகும்.
அப் பேருந்து நாளாந்தம் பழுதாகி இடை நடுவில் நிறுத்த வேண்டி உள்ளதாக அதன் சாரதியும் நடத்துநரும் கூறுகின்றனர்.
இதனால், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், பயணிகள் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் , பாரிய அளவில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக முள்ளுகாம் சந்தியில் இருந்து மறேவரை செல்லும் சாலை மிகவும் குறுகியது.
அத்துடன் அதிகளவில் வளைவுகள் கொண்ட இந்தச் சாலை ஒரு புறத்தில் மவுசாகலை நீர்த் தேக்கத்தின் ஒரமாக உள்ளது.
தினமும் 10 முறை இந்தச் சாலை ஊடாக பழமையான பேருந்தையே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என ஹட்டன் அரச பேருந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
மறே நல்லதண்ணி, மஸ்கெலியா நோர்வூட் பகுதியில் உள்ள தமிழ்,சிங்கள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் இந்தப் பேருந்து சேவையை எதிர்பார்த்துள்ளனர்.
தற்போது சேவையில் ஈடுபட்டு வரும் இந்தப் பேருந்து மூலம் பாரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் புதிய பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும்.
இது குறித்து ஹட்டன் பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்ட போது:
எமது ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள் பழுது பார்க்கும் நிலையில் உள்ளன.
அவற்றைத் திருத்திய பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் புதிய பேருந்து எமது நிலையத்திற்கு கிடைக்கும் போது வழங்க முடியும் என்றும் கூறினார்.
எனினும், அடிக்கடி முடமாகும் மஸ்கெலியா-மறே பஸ்! சேவையை சீரான நடத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் இப் பகுதிக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து அமைச்சர், ஜனாதிபதி முன் வந்து புதிய பேருந்து வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
