இருவேறு விபத்துகளில் எழுவர் பலி

மீீமுறே, நாரம்மல பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் எழுவர் பலி யாகியுள்ளனர்.

மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (19) மாலை வான் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.

மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்குச் சென்றபோது இந்த விபத்திற்கு நேர்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய வான் அதிக வளைவு கொண்ட பிரதான வீதியின் மேல் வளைவிலிருந்து கீழ் வளைவு வரை 30 மீற்றர் கவிழ்ந்து மீண்டும் பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களில் பெண்கள் மூவரும் ஆண் ஒருவரும் அடங்குவர்.

அதேநேரம், விபத்தில் குழந்தையொன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டபோது அந்த வானை பெண்ணொருவரே செலுத்தியுள்ளார். விபத்து நடந்த நேரத்தில் வானில் 6 பேர் இருந்துள்ளனர்.

வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

நாரம்மல விபத்தில் மூவர் உயிரிழப்பு

இதேவேளை, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர்த் திசையில் பயணித்த பேருந்துடன் மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் 38 வயதான சாரதியுமே இவ்வாறு உயிரிழந்தனர். இவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துநர், பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவேறு விபத்துகளில் எழுவர் பலி யான சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.