யானை வேலி அமைப்பதை விரைவுபடுத்துங்கள்

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைப்பதை விரைவுபடுத்துங்கள் என கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் நேற்று (16) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் இரத்தினசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், கந்தசாமி பிரபு ஆகியோரது பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி கலந்துகொண்டார்.

இதன்போது, சுற்றாடல் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல முன்மொழிவுகளை முன்வைத்தார்.

ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை தாங்குதலால் உயிரிழப்பு உட்பட பல சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அந்த பிரதேசத்திற்கு யானை வேலி அமைப்பதை விரைவுபடுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான நிதியினை விரைவாக ஒதுக்கீடு செய்து இத் தேவையை பூர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார்.

அதேபோல், ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள், மர ஆலைகள் போன்றவற்றின் அதிக சத்தத்தால் சூழல் மாசடைகின்றது.

எனவே, இத்தொழிற்சாலைகளை ஓட்டமாவடி பத்திரிகை தொழிற்சாலை காணிகளுக்கு மாற்றுவதற்கு எழுபது ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

சுற்றாடல் அதிகார சபை காணியை அமைச்சு வழங்குமாக இருந்தால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் எனத் தெரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதிமொழி வழங்கினார்.