ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம்

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் வீடமைப்புத் திட்டத்தை நேற்று (12) வைபவ ரீதியாக வீட்டுத் திட்டத்தைப் பயனாளிகளிடம் கையளித்தனர்.

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை, வீடமைப்பு அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவுத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் ரீ. பீ. சரத், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சேன நாணாயக்கார, அனுராதபுரம் மாவட்டச் செயலாளர், சோபித தேரர் மன்றத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கை, இந்திய மக்களின் நலன்களை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் அரசுகள் ஆற்றிவரும் ஒத்துழைப்புகளை உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கருத்து தெரிவிக்கையில், சமூக நீதிக்காக சோபித தேரர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் எலபாத்தகம கிராமத்தில் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தும் வகையில் 115 வீடுகளும் ஏனைய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வட மத்திய மாகாணத்தின் உலர் வலயத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தின் பெயர் சோபித நாஹிமிகம என மாற்றம் பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்கும் இடையில் கடந்த 2017 இல் 450 மில்லியன் இலங்கை ரூபாய் செலவிலான திட்டத்திற்குப் புரிந்துணைர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அதற்கமைய பிக்குமாருக்கான வாசஸ்தலம் உள்ளிட்ட வசதிகள் அடங்கலாக 25 வீடுகளை இலங்கை அரசாங்கம் நிர்மாணித்துக் கடந்த ஆண்டு கையளித்தது.

நேற்று ஜூலை 12 ஆம் திகதி 90 வீடுகள் கொண்ட ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதோடு இந்தத் திட்டம் நிறைவுக்கு வருகிறது.

தகவலும் படங்களும்: இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு