பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம்

பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஆர்சிபி ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததற்கு அந்த மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் செய்த ஐபிஎல் வெற்றி விழா கொண்டாடட்டம் குறித்த தவறான திட்டமிடல் மற்றும் குழப்பமான அறிவிப்பால் பெங்களூரில் 11 ரசிகர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆர்சிபி-யின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள விராட் கோலி ரசிகர்களும், ஆர்சிபி ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில் இன்று பெங்களூரில் ஆர்சிபி அணியை பாராட்டும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி நிர்வாகம், ஜூன் 3 அன்று இரவு சுமார் 12 மணி அளவில், ஐபிஎல் கோப்பையை வென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே கொண்டாடத் தீர்மானித்தது.
மறுநாள் அகமதாபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்று அங்கு ரசிகர்கள் மத்தியில் தங்கள் வெற்றி விழா ஊர்வலத்தை நடத்தப் போவதாக அறிவித்தது.

அப்போது முதலே பெங்களூருவில் இருந்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானார்கள்.
இரவு நேரத்திலேயே பெங்களூரு நகரத்தில் ரசிகர்களின் வெற்றிக் கொண்டாட்டம் எல்லை மீறியதாக இருந்தது. காவல்துறை தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
இந்த நிலையில், மறுநாள் பெங்களூருவில் விராட் கோலி உள்ளிட்ட ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் வரும்போது என்ன நடக்கும் என்ற அச்சம் இருந்தது.
இதற்கிடையே, காவல்துறை பெங்களூரு நகர சூழ்நிலையை ஆய்வு செய்து, அந்த அணியின் வெற்றி ஊர்வலத்தை ரத்து செய்ததாக அறிவித்தது.
அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைத்தளங்களில் மாலை 5 மணிக்கு வெற்றி ஊர்வலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்தக் குழப்பமான அறிவிப்பை அடுத்து ரசிகர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது.
குறிப்பாக, சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்கும் வெற்றி விழா நடக்க இருந்தது.
அதை தொடர்ந்து வெற்றி விழா ஊர்வலம் நடக்க இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதனால் சின்னசாமி மைதான வாயில்களில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடி இருந்தனர்.
அவர்கள் மதியம் முதலே சின்னசாமி மைதானத்தைச் சுற்றி குவிந்திருந்தனர். மாலை 4:30 மணி அளவில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மைதான வாயில்களை உடைப்பதற்கான முயற்சிகளும், மதில் சுவர் மீது ஏறி குதிக்கும் முயற்சிகளும் நடந்தன. நிலைமை எல்லை மீறியதால் காவல்துறை லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தது.
இதற்கிடையே பல நபர்கள் இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். சிலர் காயமடைந்தனர்.
இதை எடுத்து அங்கு இருந்த பொதுமக்களும் காவலர்களும் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர்.
கிரிக்கெட் அணியும் கர்நாடக அரசும் பொறுப்பேற்க வேண்டும்
பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம் ஏற்படவும் இந்த ஒட்டுமொத்த சம்பவத்திற்கும் சரியான திட்டமிடல் இல்லாதது முக்கிய காரணமாக அமைந்ததாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அனைத்துக்கும் மேலே, பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க நகரத்தில் வெற்றி விழா ஊர்வலம் நடத்த வேண்டும் என திட்டமிட்ட ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தான் இதில் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது.
மேலும், கர்நாடக மாநில அரசும் சரியான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த ஊர்வலத்திற்கு அவர்கள் அனுமதித்திருக்கக் கூடாது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பெங்களூரு அணி வீரர்கள் நேராக சின்னசாமி மைதானத்திற்கு வந்து சேர்ந்திருந்தால் இந்த சம்பவங்கள் எதுவும் அரங்கேறி இருக்காது.
மாறாக, விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் அறைக்குச் சென்று, அவர்கள் பிறகு அங்கிருந்து கர்நாடக முதல்வரை சந்தித்தனர். பின்னர் அங்கிருந்து சின்னசாமி மைதானத்திற்குச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமார் 4 மணி நேர இடைவெளியில் நடந்தன.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வோர் இடத்தில் இருந்து ஒவ்வோர் இடத்திற்குச் செல்லும் போதும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இது குறித்து கர்நாடக அரசும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகமும் முன்பே சிந்தித்து இருக்க வேண்டும் என்று பெங்களூர் ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
காவல்துறை முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி ஊர்வலத்தை ரத்து செய்த நிலையில், அந்த ஊர்வலம் நடக்கப் போவதாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்தது.
இதுதான் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது 11 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் இறக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த நிலைக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகமும் கர்நாடகா அரசும் இணைந்தே பொறுப்பேற்க வேண்டும்.
மூலம்: மைக்கேல் தமிழ்
