நானுஓயாவில் 28 குடும்பங்கள் இடம்பெயர்வு

தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தால் நானுஓயாவில் 28 குடும்பங்கள் இடம்பெயர்வு இடம்பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நானுஓயா தோட்டப்பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120இற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்செட் தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 12ஈற்கும் மேற்பட்டவர்கள், சமர்செட் தோட்டத்தின் லாண்டல் பிரிவில் தங்கியுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக (30) இரவு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள் நானுஓயா சமர்செட் தோட்டத்தில் உள்ள கலாபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நானுஓயா பகுதியில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
ஹற்றனில் வீடுகளின் கூரைகள் சேதம்
ஹட்டன் பகுதியில் வீசிய பலத்த காற்றினால், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவான்புர பொலனி, ஹட்டன் குடாகம, சித்தார தோட்டம்,, டிக்கோயா பகுதிகளில் உள்ள பல வீடுகளின் கூரைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் அள்ளுண்டு சென்றுள்ன.
அந்தப் பகுதிகளில் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாகவும் அட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி ரஞ்சித் ஜெயசேன தெரிவித்தார்.
மேற்படி வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் மத்திய மலைநாட்டில் கடுமையான சீரற்ற வானிலை தொடர்ந்தும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வீசிய பலத்த காற்று காரணமாக, அட்டன் பகுதி முழுவதும் உயர் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளன.
மின் தடையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அட்டன் மின்சார சபையின் மின்சார கண்காணிப்பாளர் நிமல் சமரகோன் தெரிவித்தார்.
இதேவேளை, நோர்டன்பிரிட்ஜில் உள்ள விமலசுரேந்திர நீர்மின் நிலையத்திற்கு செல்லும் வீதியில் (30) இரவு ஒரு பெரிய மரம் விழுந்ததால், (31) அதிகாலை வரை வீதியின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் வீசிய பலத்த காற்றின் போது மரம் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம், ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு (30) இரவு சரிந்து விழுந்ததால், கொட்டகலை மற்றும் தலவாக்கலை பகுதிகளுக்கு மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
க. கிருஷாந்தன்