சீரற்ற காலநிலையால் இயல்புநிலை பாதிப்பு

நாடு முழுவதும் பெய்துவரும் கடுங்காற்றுடன் கூடிய கடும் மழை, சீரற்ற காலநிலையால் இயல்புநிலை பாதிப்பு அடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சிலாபம் முதல் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்
எனவே, மறுஅறிவித்தல் வரை, இந்தக் கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்படை மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம்
காலி, களுத்துறை, கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்புவில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பெரும் சேதம்
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
பலத்த மழைவீழ்ச்சி, காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதோடு சீரற்ற காலநிலையால் இயல்புநிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுள்ளது.
மழை தொடரும் என்கிறது வானிலை மையம்
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இன்றிரவு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்த தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்..
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
