வடக்கு கிழக்கில் அமைதியான வாக்களிப்பு

வடக்கு கிழக்கில் அமைதியான வாக்களிப்பு: நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு கிழக்குப் பகுதிகளில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடந்துள்ளது.
கிழக்கில், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணிக்கு நிறைவடைந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பி. ப 12.30 மணி நிலவரப்படி 34.48℅ வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 447 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு மிக அமைதியான முறையில் நடைபெற்றது.
பல்வேறு வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கும் கடமையில் ஈடுபட்டனர்.
வடக்கு கிழக்கில் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றதுடன் செங்கலடியில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தன் வாக்களித்தார்.
மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோர் தமது வாக்குகளை பதிவுசெய்தனர்.
இதேபோன்று ஆரையம்பதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். போனஸ் உப்பினர் உட்பட 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இத்தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 கட்சிகள் குழுக்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
