ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி வருடாந்த விழா

வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் 2026 தேசிய புத்தரிசி சம்பிரதாய விழாவில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு எனும் தொனிப்பொருளின் கீழ், 59 ஆவது முறையாகவும் இந்தத் தேசிய புத்தரிசி விழா வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகில் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும், ஒரு தேசமாக நாம் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்காமல் இருப்பதற்கு, நமது விவசாயிகள் இரவு பகல் பாராது, வெயில், மழை,பனி என எதனையும் பொருட்படுத்தாமல் விவசாயத்திற்காக வழங்கும் மகத்தான பங்களிப்பே காரணமாகும்.

அதற்காக அவர்கள் அனைவரையும் ஜனாதிபதி கௌரவப்படுத்தியுள்ளார்.

எந்தவொரு நாட்டிற்கும் தமக்கே உரித்தான ஒரு பயணப்பாதை இருக்கின்றது என்றும் எமக்கே உரிய கலாசாரமும் பயணப்பாதையும் விவசாயத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

விவசாயத்துடன் பிணைந்துள்ள அந்த உன்னதமான கலாசார விழுமியத்தை இந்தப் புத்தரிசி விழா பிரதிபலிக்கின்றது.

இரத்தம், கண்ணீர்,வியர்வையின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையை இதைவிட உயரிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடம் பாரிய திட்டம் இருக்கிறது.

அதன்படி நாட்டின் சிறிய,மத்திய அளவிலான குளங்களின் கட்டமைப்பை மறுசீரமைத்து தேவையான நீர் வளத்தை வழங்குதல், விவசாய உள்ளீடுகளை நியாயமான விலையில் பெற்றுக்கொடுத்தல், விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், விளைச்சல் வீணாவதைத் தடுப்பதற்காக களஞ்சியப்படுத்தல் வசதிகள், பொதியிடல் சந்தைப் பொறிமுறையை வலுப்படுத்துதல், விளைச்சலுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய 7 பிரதான துறைகள் குறித்து கவனம் செலுத்தி தற்போதைய அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இங்குச் சுட்டிக்காட்டினார்.