குடித்துக் குடித்து பஸ் ஓடிய சாரதி

மதுபானத்தைக் குடித்துக் குடித்து பஸ் ஓடிய சாரதி பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

சாரதி நுவரெலியா நீதவான் திருமதி.லங்காகனி பிரபூத்திகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பபட்ட பின்னர், இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக நீர்கொழும்புக்கு ஏராளமான பயணிகளுடன் சென்ற திவுலப்பிட்டி டிப்போவிற்குச் சொந்தமான பஸ்ஸை நுவரெலியா சீதாஎலிய பகுதியில் பொலிஸார் நிறுத்தினர்.

நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனை செய்தபோது, சாரதி குடிபோதையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு அவரைக் கைதுசெய்தனர்.

இதனையடுத்து, பஸ்ஸில் பயணித்த அனைவரும் வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் சாரதி இருக்கையின் பின்புறம் சாரதி பயன்படுத்திய போத்தலில் மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குடித்துக் குடித்து பஸ் ஓடிய சாரதி அசங்க சஞ்சீவ பிரியதர்ஷன (வயது47) திவுலப்பிட்டி மெதகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

குடித்துக் குடித்து பஸ் ஓடிய சாரதி
சாரதியின் மது போத்தல்

க. கிருஷாந்தன்