மசகு எண்ணெய் விலை உயர்வு: தட்டுப்பாடு இல்லை

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நலையம் - படம்: அல்ஜசீரா
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால் மசகு எண்ணெய் விலை உயர்வு அடைந்துள்ளது. எனினும், நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலியானதும் தவறானதுமான செய்திகளால் பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே கொள்வனவு பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் எரிபொருள் உற்பத்தி நிலைகள், சுததிகரிப்பு நிலைகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், மசகு எண்ணெய் விலை 7 வீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.