ஈரானின் தாக்குதலால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

ஈரானின் தாக்குதலால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

ஈரானின் தாக்குதலால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நாமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான் பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நாங்கள் வசிக்கும் டெல் அவிவின் வடக்கே உள்ள ஹெர்ஸ்லியா பகுதியில் ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய விமானப்படை மற்றும் இரும்பு டோம் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கும்போது சுவர்கள் குலுங்கின.

வீடுகளின் கண்ணாடிகள் அதிர்ந்தன. பல பகுதிகளில் கட்டடங்களும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்ந்து அமுலில் உள்ளது.

டெல் அவிவ் சர்வதேச விமான நிலையமும் இஸ்ரேலிய வான்வெளியும் மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த மூன்று இலங்கையர்கள் டுபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் டுபாயில் உள்ள துணைத் தூதரகமும், அபுதாபி விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அவர்களுக்கு தற்காலிக தங்குமிட விசாக்கள் மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது விடுமுறையில் உள்ள அனைவரும் தங்கள் கடவுச்சீட்டின் நகலையும், இஸ்ரேலுக்குள் மீண்டும் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசாவின் நகலையும் தூதரகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது அவர்களின் Re-entry விசாவை நீட்டிக்க உதவும்.

ஈரானின் தாக்குதலால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை: தூதரக அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர், உதவி தேவைப்படுபவர்கள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025