வீடமைப்புக் கண்காட்சிக்கு ஜனாதிபதி விஜயம்

வீடமைப்புக் கண்காட்சிக்கு ஜனாதிபதி விஜயம்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு, நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட இன்று (31) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்தார்.

இலங்கையில் நடைபெறும் பிரதான சர்வதேச வீடமைப்பு, நிர்மாணக் கண்காட்சியான Build Sri Lanka வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சி, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) ஆரம்பமாகி, நாளை (01) நிறைவடைகிறது.

சுமார் 280 காட்சிக் கூடங்களைக்கொண்ட இந்தக் கண்காட்சியானது, வீடமைப்பு நிர்மாணத் துறையில் முக்கிய தரப்பினர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும் என்பதால், இதன் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், வர்த்தக வாய்ப்புகளைப் பெறவும், புதிய நிர்மாணங்கள், நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றிய புரிதலைப் பெறவும் கண்காட்சியாளர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.

இம்முறை கண்காட்சியை பார்வையிடுவதற்காக, 30,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளின் காட்சிப்படுத்தல் கூடங்களில் பல வகை பொருள்கள், சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் நுகர்வோருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழல் நேய நிர்மாணப் பொருள்கள் பலவற்றையும் இம்முறை கண்காட்சியில் கண்டுகொள்ள முடியும்.

கண்காட்சிக் கூடங்களுக்குச் சென்று காட்சிப்படுத்துவோரின் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, கண்காட்சியை பார்வையிட வந்திருந்தவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025