மாநிலங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை நவடிக்கை

மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சு மாநில அரசுகளுக்கு அறிவித்துள்ளது.

இந்தப் போர்க் காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சு, மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

காஷ்மீரின் பகல்ஹாமில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உள்ள ஒன்பது பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினமும் நேற்றும் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இந்தியப் படையினர் முறியடித்தனர்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதனால், மாநிலங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை நவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சு மாநிலங்களுக்கு அறிவித்துள்ளது.

தேவையான கொள்முதல்களை மத்திய அரசின் அனுமதியின்றியே மேற்கொள்ள முடியும் என்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனஙங்கள், மின் பிறப்பாக்கிகள், கூடாரங்கள், மருந்துகள் முதலானவற்றைக் கொள்வனவு செய்வதோடு அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதிகளுக்குக் கூடுதல் அதிகாரம்

இதேநேரம், தேவையான படையினரைத் திரட்டிக்கொள்வதற்கும் சுதந்திரமான பதில் தாக்குதல் நடத்துவதற்கும் படைத் தளபதிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் 14 ஆயிரம் படையினரை நிலை நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வணக்கஸ்தலங்கள், குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர். எனினும்,இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு இந்தியப் படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சீன, துருக்கி ஆயுதங்கள் பயன்பாடு

பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் சீனாவிலும் துருக்கியிலும் தயாரிக்கபபட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனத் தயாரிப்பு விமானங்களை இந்தியப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்த ஏவுகணைகளை இந்தியப் படையினர் ஆகாஷ் ஏவுகணை கொண்டு வழிமறித்துத் தாக்கியழித்ததாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பயன்படுத்தி ஆகாஷ் ஏவுகணை

எல்லையில் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயற்சித்த ஏழு பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றதாகவும் ஒருவரை உயிருடன் பிடித்ததாகவும் இந்தியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பல நரகங்களில் இயல்பு நிலை

போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இயல்பு நிலை காணப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பாய், கொல்கத்தா, ஹைதரபாத் முதலான நகரங்களில் இயல்பு நிலை காணப்படுகிறது. டில்லியில் விமான சேவைகள் இயங்குகின்றன. எனினும், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் விமான சேவைகள் வழமை

எவ்வாறாயினும், பாகிஸ்தானின் லாகூர் விமான சேவை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வான் பாதுகாப்பு முறைமையைத் தாக்கி அழித்துவிட்டதாக இந்தியா தெரிவித்திருக்கும் நிலையில், விமானங்கள் இயக்கப்படுகின்றன.

எனினும், பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டடிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்த படையினருக்குப் பாகிஸ்தான் அனுமதியளித்துள்ளது.

அமைதியை ஏற்படுத்த சீனா தயார்

மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கம் மாநில அரசுகளுக்கு அறிவித்திருக்கும் சூழலில், அமைதியை ஏற்படுத்த தயார் என்று சீனா தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025