வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு: வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன்று(05) அமோக வரவேற்பளித்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில், இரு தலைவர்களும் இலங்கை, வியட்நாமின் தேசிய கீதங்களுக்கு மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னேற்ற மீளாய்வு, எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இந்தப் பயணத்தின் மூலம் அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நடைமுறையானதும் செயற்திறன்மிக்கதுமான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1970 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதிலிருந்து வியட்நாமும் இலங்கையும் வலுவான உறவுகளைப் பேணி வருகின்றன.

இலங்கையும் வியட்நாமும் வருடாந்த இருதரப்பு வர்த்தகத்தின் மூலம், முக்கியமாக ஏற்றுமதிகள், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வரை எட்டியுள்ளன.

எதிர்வரும் வருடங்களில் இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதை இரு தரப்பினரும் இலக்காகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு வியட்நாமும் இலங்கையும் இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், பரஸ்பர நம்பிக்கையையும் பகிரப்பட்ட அபிவிருத்தி இலக்குகளையும் பயன்படுத்தி உறவுகளை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் தயாராக உள்ளன.

ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயம், வியட்நாமுடனான பாரம்பரிய நட்புறவுக்கான இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதோடு, டிஜிட்டல் பரிமாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம், வலுசக்தி மாற்றம், செயற்கை நுண்ணறிவு, பாரம்பரிய துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது.