ஏறாவூர் படுகொலை: 18 ஆண்டு கழித்து ஈபிடிபி 8 பேருக்கு மரண தண்டனை!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், வழக்கின் 9ஆவது எதிரியை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் அப்போதைய செங்கலடி முகாமுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி உறுப்பினர்களால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் புதைக்கப்பட்டு, அதன் மேல் வாழைமரம் நாட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளியாகக் காணப்பட்ட எண்மருக்கு இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரால் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், 2016ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் ரவி என்கின்ற தர்மலிங்கம் இளமாறன், வீரக்குட்டி சேகர், விஜய் என்கின்ற மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என்கின்ற யோகராசா ஜெயக்குமார், சிறி என்கின்ற சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என்கின்ற சொக்கலிங்கம் நாகராசா, அருள் என்கின்ற அருணாச்சலம் ராமச்சந்திரன்,விஜி என்கின்ற கோவிந்தன் பிரதீபன் ஆகிய எட்டுப் பேரே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, சட்டவிரோதக் கூட்டத்தில் அங்கம் வகித்தமை தொடர்பான முதலாவது குற்றச்சாட்டின் கீழ் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும், ஆட்கொலை தொடர்பான ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது அரச தரப்பு சட்டத்தரணிகளான எஸ். அனுஷாங்கன்,ரி. தர்சிகா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டுப் பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்