மாநகர சபையும் வளிமண்டல திணைக்களமும் மாறுபட்ட கருத்து!
கொழும்பு மாநகரத்தில் 129 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியைக்கூடத் தாக்குப் பிடிக்காத வடிகால் முறையே காணப்படுகிறது என்று கொழும்பு முதல்வரும், இதனைவிடக் கொழுத்த மழை கடந்த ஆண்டுகளில் -400 மி.மீ வரை- பெய்துள்ளதே! வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையே திடீர் வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளரும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி சர்சைக்குள்ளாகியுள்ளனர்!
கொழும்பு நகரம் முழுவதும் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்குக்குக் காரணமான காரணிகள் தொடர்பில் கொழும்பு மேயரும் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளரும் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டமையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீட்டர் என்ற அதிக மழைவீழ்ச்சி நகரத்தில் பெய்தமையே இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என கொழும்பு மேயர் பல்தசார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரிலுள்ள வடிகால் அமைப்பு 30 மில்லிமீட்டருக்கும் 50 மில்லிமீட்டருக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சியை மாத்திரமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நகரத்தின் வடிகால் அமைப்பு சரியாகப் பராமரிக்கப்படாமல் கழிவுகள் அடைபட்டிருந்தமையினால் நீர் வடிந்து செல்வது தடைப்பட்டதே இந்த வெள்ளப் பெருக்குக்கு அடிப்படை காரணம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த காலத்தில் இதைவிடக் அதிகமான மழைவீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதை நினைவுகூர்ந்த அவர், 1992 ஆம் ஆண்டில் 440 மில்லிமீட்டர் என்ற சாதனை அளவிலான பெருமழையும், 2016, 2017 ஆம் ஆண்டுகளில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் கொழும்பில் பதிவாகியிருந்ததாக பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.
