ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை கனரக வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் இருந்து அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடார். கனரக வாகனத்தை விட்டுவிட்டு சாரதி தப்பி ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (6) மட்டக்களப்பு திமிலைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
மட்டக்களப்பு நகர் சூரியா வீதியைச் சேர்ந்த 58 வயதுடைய வலையிறவு த.க.பாடசாலையில் கல்வி கற்பித்து வரும் கமலநாதன் மதிவதனி என்ற ஆசிரியையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதையடுத்து இருவரும் கீழே வீழ்ந்தனர். அப்போது ஆசிரியை மீது கனரக வாகனம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிபர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கனரக வாகன சாரதி வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அங்குப் பொதுமக்கள் ஒன்று திரண்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிசார் கனரக வாகனத்தை மீட்டெடுத்துக்கொண்டு சென்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதையடுத்து சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சா. நடனசபேசன், மட்டக்களப்பு
