இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய கப்பல்கள் இல்லையென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனால், அவற்றுக்கு வசதிகளை வழங்க வேண்டியதில்லையென்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய,ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்பகுதிக்கு அருகில் தரித்து நிற்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்தக் கப்பல்கள் இலங்கையின் எல்லைக்குரிய 12 கடல் மைல் தொலைவில் இல்லையென்று வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் தரித்து நிற்பதாகவும், அவற்றில் சில கப்பல்கள் உணவு, குடிநீர் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை 25 கடல் மைல் தொலைவில் தரித்திருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
பொதுவாக இக்கப்பல்கள் ஈரானிய மசகு எண்ணெயை மலேசியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்புக்கு கொண்டு சென்று, அங்கு மற்ற கப்பல்களுக்கு எண்ணெயை மாற்றிய பின்னர் மீண்டும் ஈரானுக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவின் தடைகள்,கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இந்தச் செயன்முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மசகு எண்ணெயை இறக்கிய பின்னர் சில கப்பல்கள் ஈரானுக்குத் திரும்ப முடியாத அல்லது திரும்ப விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்புக்கு வெளியே இருப்பதால், அவற்றின் மீது இலங்கை அரசாங்கத்துக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டால் இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
