ஜின், நில்வளா கங்கை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஜின், நில்வளா கங்கை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜின் கங்கை, நில்வலா கங்கையை ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு நாளை (25) அதிகாலை 2.30 மணி வரை செல்லுபடியாகும்.

தற்போது கிங் கங்கை படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவில் பலத்த மழை பெய்துள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

இம்மழை நிலைமை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் கிங் கங்கை படுகையில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்மானிகளின் நீர்மட்ட பகுப்பாய்வுகளுக்கு அமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தவலம, நாகொட, பத்தேகம, வெலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நில்வலா கங்கை படுகையில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்மானிகளின் நீர்மட்ட பகுப்பாய்வுகளுக்கு அமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தரை, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புருப்பிட்டிய மற்றும் திககொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நில்வலா கங்கையின் வான் பாயும் சமவெளியைச் சேர்ந்த தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்களிடமும், அப்பகுதிகள் ஊடாகப் பயணம் செய்யும் வாகனச் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.