இரத்தினபுரி மாநகரம் விரைவில் புதுப் பொலிவுபெறும் என்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரா தெரிவித்தார்.
இரத்தினபுரி மாநகரம் புதிய பல விசேட அம்சங்களுடன் கூடியதானதாகவும் எதிர்வரும் நூற்றாண்டுக்கான ஒரு முழுமையான நகரமாக மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு இன்னும் மூன்று வருடங்களில் மின்சார ரயில் இரத்தினபுரி வரை வந்தடையும் எனவும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சாந்த பத்மகுமார தெரிவித்தார்.
நேற்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரத்தினபுரி மாநகர சபை மண்டபத்தில் கல்வி ஊழியர்களின் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடைய புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் நேற்று (25) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சாந்த பத்மகுமார கலந்துகொண்டார்.
புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய 182 மாணவ மாணவிகளுக்கான தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:
புகையிரதப் பாதையை ஆரம்பிப்பதற்கான சமூக ஆய்வுகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.
அவை நிறைவுற்ற உடன் புகையிரத பாதை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மே.ற்கொள்ளப்படும் அத்தோடு வீடுகளையும் காணிகளையும் இழப்பவர்களுக்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலான நஷ்ட ஈடும் வழங்கப்படும்.



கஹதுடுவையிலிருந்து இங்கிரியா வரையிலான ருவன்புரம் அதிவேக பாதையின் நிர்மா ண பணிகளும் சில வருடங்களில் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
அத்துடன் இரத்தினபுரி மாநகரம் நெக்ஸ்ட் லெவல் சிட்டியாக அபிவிருத்தி செய்யப்படும் அதற்காக சனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க இந்த வருட நவம்பர் மாதம் கொண்டு வர உள்ள வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கி தருவதாக அறிவித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
மாணவர்கள் உங்களுடைய எதிர்காலம் தொடர்பாக கவலை அடைய வேண்டிய அவசியம் இல்லை ஊழல் மோசடிகளும் போதை பாவனைகளும் இல்லாத சகல மக்களையும் சமமாக மதிக்கத்தக்கதொரு நகரமாகவும் நாடாகவும் எமது நாடு மாற்றம் அடையும் என்றார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
