பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை மிக விமரிசையாக நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் கொடித் தம்பத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, கொடித் தம்பத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, உள்வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னர், திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, தீர்த்த உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
அப்போது, திரண்டிருந்த பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவதற்காகப் பாலாவி தீர்த்தத்தில் மூழ்கி, தீர்த்தச் செம்புகளில் புனித நீரை எடுத்துச் சென்று மகாலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
