இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி

இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கான 9ஆவது ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையைச் சேர்ந்த 40 சிவில் சேவை அதிகாரிகள் கலந்து கொண்ட
ஒன்பதாவது ஆளுமை விருத்தி செயல்திட்டம் 2026 மே 8 ஆம் திகதி
இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய நிலையத்தில் (NCGG) வெற்றிகரமாக
நிறைவடைந்தது.

அனர்த்த முகாமைத்துவம் என்ற தொனிப்பொருளில்
முன்னெடுக்கப்பட்ட இத்திட்டமானது இலங்கை அபிவிருத்தி நிர்வாக
நிறுவகத்தினால் (SLIDA) முன்வைக்கப்பட்ட பிரத்தியேக கோரிக்கையின்
அடிப்படையிலும், முன்னர் இடம்பெற்ற இவ்வாறான நிகழ்ச்சி திட்டங்கள்
தொடர்பான நேர்மறையான பின்னூட்டங்கள் அடிப்படையிலும்
ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது NCGG மற்றும் SLIDA ஆகிய நிறுவனங்கள் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அமுலாக்கத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்பமானதை இந்நிகழ்ச்சி திட்டம் குறித்து நிற்கின்றது. 5 வருட காலப்பகுதிக்குள் 1500 இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ள நிலையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட முதலாண்டில் (2025-26) 321 அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவம், அனர்த்த தயார் நிலை, தணிக்கை உபாயங்கள்,
தேசிய பாதுகாப்பு மற்றும் ஆட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில்
குறித்த நிகழ்ச்சி திட்டம் கவனம் செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் பிரதமர் கதிசக்தி, GeM, ஸ்வாமித்வா திட்டம், ஆதார், டிஜிட்டல் பொது
உட்கட்டமைப்பு மற்றும் அரச அனர்த்த முகாமைத்துவ ஆய்வுகள் உள்ளிட்ட
இந்தியாவின் முன்னோடி செயல்திட்டங்கள் தொடர்பான உள்நோக்குகளையும்
குறித்து அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

இந்த செயல்திட்டத்தில், தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையம் (NDMA),
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), அரச பேரிடர் மீட்புப் படை (SDRF), பிரதம
மந்திரி சங்கிரகலயா உள்ளிட்ட முதன்மை நிறுவனங்களுக்கான விஜயங்களும்
அடங்கியிருந்தன. இது பங்கேற்பாளர்களுக்கு இந்தியாவின் பேரிடர்
முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் ஆட்சி கட்டமைப்புகள் குறித்த நடைமுறை
அனுபவத்தை வழங்கியது.

ஆளுமை விருத்தி செயல்திட்டம், இலங்கையுடனான இந்தியாவின்
அபிவிருத்தி ஒத்துழைப்பின் ஒரு முக்கிய ஆதாரமாக திகழ்கின்றது. இந்தியப்
பிரதமர் அவர்கள் ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோக
பூர்வ விஜயத்தின்போது, ​​மேலதிகமாக 700 வருடாந்த பயிற்சி ஆசனங்கள்
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆண்டுதோறும் 1000
இலங்கையர்களின் ஆளுமை விருத்தி திட்டங்களுக்கு இந்தியா
ஆதரவளிக்கிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும்
இடையிலான இருதரப்பு பங்குடைமை வலுவடைகின்றமையை
பிரதிபலிக்கிறது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு – 12-05-2026