சர்வதேச தொழிலாளர் நாளான இன்று (மே 01) நாட்டின் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி
ஆளும் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் 21 இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்துகிறது.
வடக்கு, கிழக்கு, மத்திய மலைப்பகுதி, கொழும்பு முதலான இடங்களில் தேசிய மக்கள் சக்தி கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது.
உருட்டு, பிரட்டு, திருட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் இன்று மே 01 கொழும்பு மாளிகாவத்தை பீ. டி. சிறிசேனா விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
‘உருட்டு, பிரட்டு, திருட்டு எனும் தொனிப்பொருளில் இந்த மேதினக்கூட்டம் நடைபெறுகிறது.
இம்முறை மேதின பேரணி எதுவும் இடம்பெறாது என்பதுடன், கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாரியளவில் இதில் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மேதினக்கூட்டத்தை நடத்தாது.
இருப்பினும் மேதின நிகழ்வுகளின் ஓர் அங்கமாக மறைந்த தலைவர் ரி. பீ. இலங்கரத்தினாவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சி, இம்முறை பிரம்மாண்டமான மே தினக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரளை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 இற்கு நடைபெறுகிறது.
‘ஊழல் மிகு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம்’ என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் இல்லத்திற்கு அருகாமையில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து மேதினக்கூட்டத்தை நடத்துகின்றனர்.
முன்னிலை சோசலிசக் கட்சி
முன்னிலை சோசலிச கட்சியினர் ‘ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்திற்கு அடிபணிந்தாடும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அதிகாரம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்துகின்றனர்.
அதேவேளை சுயாதீன தொழிற்சங்கங்கள்,பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி ஏ. ஈ. குணசிங்கா மைதானத்தைச் சென்றடையவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினக்கூட்டத்தை பெருந்தோட்ட வாரியாக நடத்தத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் இம்முறை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்கலான எதிரணியில் உள்ள முக்கிய கட்சிகள் மேதினப் பேரணியை இம்முறை நடத்தாதிருக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வி. அருள்செல்வன்
