மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா!

ஆறு நாள்கள் விசேட நிகழ்ச்சிகள்

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விழா நினைவுச் சின்னமாக சுவாமி விவேகானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை மிகவும் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது.

நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக, கல்வி,சமூகப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மட்டக்களப்பில் கடந்த 12 திகதி முதல் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக கல்வி, ஆன்மிகம், சமூக சேவை,மனிதநேயப் பணிகளில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா!

இந்நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகளாவிய இராமகிருஷ்ண மடம், மிஷனின் உபதலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, நவம்பர் 12ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக நவம்பர் 12ஆம் திகதி பக்தர்கள், குருகுலப் பழைய மாணவர்கள், ஆலய அறங்காவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ்ஜிற்கான வரவேற்பு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 13 ஆம் திகதி விவேகானந்தா மகளிர் கல்லூரி,கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இளைஞர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று நவம்பர் 14ஆம் திகதி இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் விசேட பூஜைகள், வேத பாராயணம், கொடியேற்றம், பஜனை என்பன மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையில் நிகழ்ந்தன.

நூற்றாண்டு நினைவுச் சின்னம் உலகளாவிய இராமகிருஷ்ண மடம்,மிஷனின் உபதலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவுகள் என்பன மிகச் சிறப்பாக நடைபெற்றன.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்ச்சி நாளை நவம்பர் 15ஆம் திகதி காலை 9 மணிக்கு கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நூற்றாண்டு காலமாக மட்டக்களப்பு மண்ணில் ஆன்மிகத்தையும் கல்வியையும் சமூக சேவையையும் முன்னெடுத்து வரும் இராமகிருஷ்ண மிஷனின் இந்த நூற்றாண்டு நிறைவு விழா, கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வுகளில் ராமகிருஷ்ண மிஷன் துறவிகள், பக்தர்கள், இல்ல மாணவர்கள், பொது நிலையினர் என்று பலரும் கலந்து கொண்டு சிறப்பிகக்கின்றனர்.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்