சம்மாந்துறையில் கொரிய, ஜப்பானிய, ஆங்கில மொழிப் பயிலரங்கு!

கொரிய, ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்பதன் அவசியம் மற்றும் அவற்றின் தொழில்வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வுப் பயிலரங்கு, ஏறாவூர் சாரா கொரியன்ஸ் கொலீஜின் அனுசரணையில், சம்மாந்துறை டலண்ட் பிளஸ் ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில், சம்மாந்துறையில் அமைந்துள்ள ஆடம்பர விடுதியில் (23) நடைபெற்றது.

சம்மாந்துறையில் கொரிய, ஜப்பானிய, ஆங்கில மொழிப் பயிலரங்கு!

டலண்ட் பிளஸ் நிறுவனத்தின் தலைவர் அல்-ஹாபிழ் ஆர். முகம்மத் சில்ஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். பிரதான வளவாளர்களாக சாரா கொரியன்ஸ் கொலீஜின் நிறுவனரும் கொரிய மொழியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல். முஹம்மத் இர்பான், அக்கல்லூரியின் முகாமையாளரும் ஜப்பானிய மொழி விரிவுரையாளருமான எம்.பி.எம். சமீல், ஆங்கில மொழியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர். முகம்மத் றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். அத்துடன், டலண்ட் பிளஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் எம்.என். சுகைப் அகமட், நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஏ.ஜே. ஜாஸ்மின் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் தேசபந்து ஜலீல் ஜீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மொழிப் பயிற்சியின் முக்கியத்துவம்

இன்றைய உலகில் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது இளைஞர், யுவதிகளின் எதிர்கால முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும். கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் அந்த நாடுகளில் கல்வி கற்பதற்கும், தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்புகள் விரிவடைகின்றன.

அதேவேளை, சர்வதேசத் தொடர்பாடல், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆங்கில மொழியறிவு முக்கிய பங்கு வகிக்கின்றது.

மொழித்திறன் என்பது வெறுமனே உரையாடுவதற்கான ஆற்றல் மட்டுமன்றி, பிற கலாசாரங்களைப் புரிந்துகொள்வதற்கும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும், போட்டிமிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் தம்மைத் தகுதிப்படுத்திக்கொள்வதற்கும் உதவும் திறனாகும். இவ்வாறான பயிலரங்குகள் இளைஞர், யுவதிகளுக்குப் புதிய கல்வி மற்றும் தொழில் வழிகளை அறிமுகப்படுத்தி, அவர்களின் எதிர்கால இலக்குகளைத் திட்டமிடுவதற்கு வழிகாட்டுகின்றன.

(மின்மினி மின்ஹா)