October 23, 2026 1:00 pm
திபெத்தில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 16 பேர் பலி, 32 பேர் காயம்

திபெத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் பலியானதாகவும், 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10.33 மணிக்கு வடக்கு திபெத்தின் நாகு நகரில் உள்ள பாகென் பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாக பதிவானது. பூமிக்கு அடியில் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நடுக்கத்தால் அந்த பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 32 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 11 பேருக்கு பலத்த காயமும், 21 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன. சேதத்தின் முழுமையான விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, சிசாங்கில் உள்ள பிராந்திய அவசரகாலக் கட்டளை மையம், நிலநடுக்கத்திற்கான இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக ரயில் சேவைகளை ரயில்வே அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் என சீன அரசின் தேசிய ஒளிப்பரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, “இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 8.03 மணிக்கு 173 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி 32.368° வட அட்சரேகை மற்றும் 93.853° கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளது.

யுரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும் நிலப்பரப்புக்கு மேலே திபெத் பீடபூமி அமைந்துள்ளதால், இந்த பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.