நாடு முழுவதும் இன்று (23) பலத்த மழை பெய்யும் என்பதால், பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
இலங்கையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாட்டில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவை, மத்திய, வடமேல்,வட மாகாணங்களிலும், அநுராதபுரம், காலி ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (23) தென்கிழக்கு,அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
