தென் கொரியாவில் வணிக வளாகத்தில் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களில் 8 பேரைக் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் இன்சியான் நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் குறைந்தது எட்டு பேரைக் கத்தியால் குத்தியதாக போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இன்சியானின் நாம்டாங் மாவட்ட காவல் நிலையம், 59 வயதான சந்தேக நபரைக் கைது செய்தது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில், மாரடைப்புடன் மருத்துவமனைக்கு வந்த 20 வயதான இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக இன்சியான் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
மற்றவர்களின் காயங்கள் தீவிரம் குறித்த விவரங்களை அவர்கள் உடனடியாக வழங்கவில்லை.
சந்தேக நபர் தனது இரு கைகளிலும் கத்திகளைக் கட்டியிருந்ததாக ஒரு சாட்சி கூறியதாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாலின் அடித்தளத்தில் உள்ள ஒரு தள்ளுபடிக் கடையில் அந்த நபர் மக்களைக் கத்தியால் குத்தத் தொடங்கியதாகவும், பின்னர் நகரும் படிக்கட்டில் மேலே செல்லும்போதும் மற்றவர்களையும் தொடர்ந்து தாக்கியதாகவும் அந்த சாட்சி கூறினார்.
இறுதியில் அங்கிருந்தவர்கள் அந்த நபரைக் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தால் வணிக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
