திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மீளச் செயற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராய்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் இணைத் தலைமையில், திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான விசேடக் கலந்துரையாடல் இன்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கடந்த காலங்களில் திக்கம் வடிசாலை முடங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்தகால ஆட்சிக் காலத்தில் சங்கத்தினருக்குத் தெரியாமல் தனியார் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும், ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்களை முன்வைத்து திக்கம் வடிசாலையைத் தொடர்ந்து முடங்கிய நிலையில் வைத்திருக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், அதனை மீள இயக்குவதற்குத் தடையாக உள்ள விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கும், இம்முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நீண்டகாலமாகத் தீர்வின்றித் தொடரும் திக்கம் வடிசாலை விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டு, அது மீண்டும் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் சட்டரீதியான அம்சங்களை ஆராய்ந்து உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
திக்கம் வடிசாலையை நிர்வகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைத் தங்களிடம் வழங்குமாறு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதனை வழங்குவதற்கான சாத்தியப்பாடுகளைத் தீர்மானிக்கும் முன், நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடந்த காலங்களில் யாழ்ப்பாண மாவட்டச் செயலராகப் பணியாற்றியபோதும் திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். தற்போதைய ஒப்பந்தத்தின் காரணமாக, தொடர்புடைய கூட்டுறவுச் சங்கத்தினரால் உரிய பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதையும், சங்க உறுப்பினர்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதுடன், திக்கம் வடிசாலையை எதிர்காலத்தில் எவ்வாறு மீள இயக்குவது என்பது குறித்தும் விரிவாக ஆராய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். குறிப்பாக, அனுமதிப்பத்திரத்தைச் சங்கத்தின் வசம் வைத்துக்கொண்டு, தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து வடிசாலையை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டுமென அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், திக்கம் வடிசாலையையும் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மீண்டும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், திக்கம் வடிசாலை தொடர்பான ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், அது 25 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் வடிசாலை மூடப்பட்டமை மற்றும் அதனை மீள இயக்குவதில் காணப்படும் சட்டச் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற வடமராட்சி பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிப் பிரதிநிதிகள், திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு நன்றியைத் தெரிவித்தனர். மேலும், கொத்தணியின் பெயரில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டால், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட முதலீட்டாளர்களுடன் இணைந்து வடிசாலையைச் செயற்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கலந்துரையாடலின் முடிவில், பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கும், திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்ந்து, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், இந்நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்து முடிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், முகாமையாளர் மற்றும் உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிகள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், அமைச்சர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
