சவூதி சிறையில் அனோஜனை சந்தித்த இலங்கை தூதுவர் அமீர் அஜ்வாட்

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு சவூதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட் இன்று (08) சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

அனோஜனை நேரில் சந்தித்ததாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர், அங்கு சென்றுள்ள இலங்கையின் விசேட சட்டத்தரணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ரியாத் நகரிலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு சென்ற தூதுவர், அனோஜனின் நிலைமை தொடர்பான தகவல்களை தொலைபேசி ஊடாக இலங்கையிலிருந்து சவூதி அரேபியா சென்றுள்ள விசேட சட்டத்தரணிகள் குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அனோஜனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கில் இலங்கையின் விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று தற்போது சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சவூதி அரேபியாவில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த விசேட சட்டத்தரணிகள் குழு கடந்த 06ஆம் திகதி சவூதி அரேபியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் சில மோதல் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல், அனோஜனை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக இந்தக் குழுவினர் சவூதி அரேபியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கடந்த சில நாள்களாக சவூதி அரேபியாவில் சில அமெரிக்க இலக்குகள் மீது பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்தத் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் பொருட்படுத்தாது, அனோஜனை மீட்பதற்கான நடவடிக்கைகளின் ஆரம்பகட்டப் பணிகளை இந்தக் குழுவினர் முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அஷ்ரப் மாஃபிர்