சம்மாந்துறையில் திருடப்பட்ட மாடுகள் மருதமுனையில் மீட்பு!

சம்மாந்துறையில் திருடப்பட்ட மாடுகளை மருதமுனையில் அறுவைக்காக வைக்த்திருந்தபோது பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமம் 2, இல.180 முகவரியில் வசிக்கும் கலந்தர் லெப்பை அப்துல் றசூல் என்பவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாடுகள் கல்முனை ஊடாக மருதமுனைப் பகுதியில் அறுவைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸாரின் இரகசிய விசாரணைகளையடுத்து, மருதமுனையைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாடுகளை சம்மாந்துறையிலிருந்து அறுவைக்காக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்மாந்துறையை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபரும் பொலிஸாரின் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதமுனைப் பகுதியில் எஞ்சியிருந்த ஏழு எருமை மாடுகளையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்டு, பொலிஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று 05ஆம் திகதி திங்கட்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இத்திருட்டுச் சம்பவத்துடன் மேலும் பலர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பில் உள்ள ஏழு எருமை மாடுகளையும் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு, 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணை நிபந்தனையின் அடிப்படையில் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் – சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – நிசாந்த பிரதீப் குமார, குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் – கே.வீ.எல். சமீர ஆகியோரின் தலைமையில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் சார்ஜன்ற் விஜயரட்ண, சார்ஜன்ற் நிலந்தி, சார்ஜன்ற் ஜுனைதீன், பொலிஸ் கான்ஸ்டபிள் எம்.எல். ராபீ, பொலிஸ் உதவியாளர் பாரூக் ஆகியோர் அடங்கிய குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

ஜலீல்